ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குலதெய்வம் வைத்திருக்கிறார்கள். இருப்பினும் ஊரிலும் முக்கிய தெய்வங்களை வைத்து வணங்கி வருகின்றனர். மேலத் தெருவில் ஐயன் குளம் கரையில் அமர்ந்திருப்பவர் வினாயகர். இவரை வெள்ளந்தாங்கி வினாயகர் என்று பெயர் வைத்து அழைப்பார்கள். கிழத்தெரு கடைசியில் இருப்பது மாரியம்மன், காளியம்மன் கோவில். மாரியம்மனை ஆகாச மாரியம்மன் என்று அழைப்பார்கள்.
கிழக்கே வயல்காட்டில் வீமாகாளி அம்மன் கோவிலும் அதன் வாசலில் கிழக்கு பார்த்து நிற்கும் வீரன் சிலையும், கொஞ்சம் தள்ளி தெற்கு பார்த்து நிற்கும் சாம்பான் சிலையும் இருக்கிறது. வடக்கே சிவன் கோவில் உள்ளது. அங்கு பெரிய லிங்கம் சிலையும் அதன் அருகில் விநாயகர், சுப்பிரமணியர், அம்மன் சிலை ஒன்றும் உள்ளது.
வடக்கு தெருவில் உள்ள கடைசி வீட்டின் எதிரே மாடனுக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. அங்கு உள்ள மரத்தடியில் மின்னடியானுக்கும், கழுவடையானுக்கும் படையல் செய்து வணங்குவதை பார்த்திருக்கிறேன்.
வடக்கே பெரிய வாய்க்கால் தாண்டி கூந்த பனை மரம் உள்ள இடத்தில் வேம்பையன் கோவில் உள்ளது. அங்கும் வேம்பையன் குடும்பம் வழிபட்டதாக கூறுவார்கள். தெற்கு தெருவில் மன்மத சாமிக்கு காமண்டி திருவிழா செய்வார்கள்.
பள்ளிக்கூடம் பின்னால் பழைய பட்டாமணியர் சீனிவாசராஜூ அவர்களின் நினைவாக சாமாதி கோவில் உள்ளது. அங்கு அவரது நினைவு நாளில் குருபூஜை செய்து வணங்கியதை பார்த்திருக்கிறேன். அதே போல மாரியம்மன் கோவில் எதிரே கோவில் காளை புதைத்த இடத்தில விளக்கு வைத்து வணங்குவார்கள். நரசிம்மராஜூ அவர்கள் வீட்டு பின்புறம் உள்ள விலாமரத்தடியில் அம்மனை வைத்து வணங்கினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக